மரணச் சான்றிதழையும் இழப்பீட்டையும் வழங்குவதற்கு இந்த அரசாங்கம் மும்முரமாக வேலை செய்து கொண்டுள்ளது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி குற்றச்சாட்டு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு மரணச் சான்றிதழும் இழப்பீடும் வேண்டாம்; பிள்ளைகளே வேண்டும் – யோகராசா கனகரஞ்சினி
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு மரணச் சான்றிதழ் மற்றும் இழப்பீடு வழங்குவதன் மூலம் அவர்களின் உண்மைக்கும் நீதிக்குமான போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக வடக்கு–கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் 30ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நடத்தப்படவுள்ள சர்வதேச மாநாட்டை தந்தை செல்வா அரங்கில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எங்களுடைய போராட்டத்தையும், எங்களுடைய விடுதலைக்கான நோக்கத்தையும் நீர்த்துப் போகச் செய்யும் வகையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து காணாமல் போனோர் அலுவலகம் செயற்பட்டு வருகிறது.
அந்த அலுவலகத்தின் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தி, எங்களுக்கான நீதி சர்வதேச நீதியே என்பதை வலியுறுத்தி வருகின்றோம். ஆனால், இரவோடு இரவாக சில மாவட்டங்களில் அந்த அலுவலகங்களைத் திறந்து, அப்பாவி தாய்மார்களை அழைத்து, ‘இதைத் தருவோம், அதைத் தருவோம்’ எனக் கூறி மரணச் சான்றிதழ்களையும் இழப்பீடுகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டு வருகிறது.
அண்மையில் கோப்பாயில் நடைபெற்ற காணாமல் போனோர் அலுவலகத்தின் கூட்டத்தில் கலந்துகொண்ட தாய்மார்கள் அனைவரும், ‘எங்களுக்கு இழப்பீடு வேண்டாம், மரணச் சான்றிதழும் வேண்டாம்; எங்களுக்கு எங்களுடைய பிள்ளைகள்தான் வேண்டும்’ என்று தெளிவாகக் கூறினர்.
உண்மைக்கும் நீதிக்குமான இந்தப் போராட்டம் சர்வதேசத்தை நோக்கிய தூய்மையானதும் நீண்டதுமான பயணமாகும். எங்களுக்கான நீதி சர்வதேச நீதியே என்பதை தாய்மார்கள் கண்ணீர் சிந்தி வீதிகளில் நின்று வலியுறுத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், தானும் பாதிக்கப்பட்ட அரசாங்கம் எனக் கூறி பல்வேறு கருத்துகளை முன்வைத்தாலும், இதுவரையில் எங்களுடைய பிரச்சினைக்கு ஒரு துளியளவுக்குக்கூட தீர்வு காணவில்லை. எனவே, இந்த அரசாங்கம் ஒருபோதும் எங்களுக்கு நீதியை வழங்காது என்பதை பாதிக்கப்பட்ட தாய்மார்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எதிர்வரும் 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில், தங்களுடைய கண்ணீர், வேதனை மற்றும் ஆதங்கங்களை வெளிப்படுத்துவதற்கு தாய்மார்கள் ஒன்றுகூடுகின்றனர்.
சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்கு, மனித உரிமைகளை நேசிக்கும் சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை அழைத்து, எங்களுக்கான நீதி சர்வதேச நீதியே என்பதை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொடூரமான யுத்தமும் இன அழிப்பும் இடம்பெற்ற பின்னர் கையளிக்கப்பட்ட எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். அதற்கான நீதியே எங்களுக்கு கிடைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

