Our Campaigns

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடுகடந்த உறவுகளின் சங்கத்தினால் பிரித்தானிய பிரதமரிற்கு மகஜர்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடுகடந்த உறவுகளின் சங்கத்தினால் பிரித்தானிய பிரதமரிற்கு மகஜர்.

பிரித்தானியாவை தளமாக கொண்ட, இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடு கடந்த உறவுகளின் சங்கம் (Association of Exiled Relatives of the Enforced Disappeared in Sri Lanka – UK (AERED-SL)) என்ற அமைப்பினால் தமிழ் மக்களிற்கெதிராக இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டு 13 ஆம் ஆண்டுகள் கடந்திருப்பதை நினைவு கூரும் முகமாக, பிரித்தானிய பிரதமரிற்கு மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது, இலங்கையில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து வாழும், இலங்கை அரசால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை இணைந்து, இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தினால் (ICPPG) அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பலவித அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் துணிந்து நின்று போராடும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கங்களின் நீதிகோரும் போராட்டங்களுக்கு பலம் சேர்க்கும் வகையிலும், இலங்கையில் இருந்து வெளியேறி புலம்பெயர் நாடுகளில் சிதறி வசித்துவரும், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஒருங்கிணைந்து அவர்களுக்கு பக்கபலமான குரலாக சர்வதேச மட்டத்தில் ஒலிக்கச் செய்யும் நோக்கிலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் புலம்பெயர் உறவுகளால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களால் பிரித்தானிய பிரதமருக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த மனுவில் “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்று 13 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இதுவரை பாதிக்கப்பட்ட தமிழ்மக்களிற்கான நீதி கிடைக்காமல் தவிக்கும் நிலையில் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திரசில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான (GSR) தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் சர்வதேச மனித உரிமைகள் விடயத்தில் பிரித்தானியா தனது நிலைப்பாட்டை நிரூபித்துக்காட்ட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட யுத்தகுற்றங்கள், யுத்தம் முடிந்தபின் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை, மற்றும் தொடர்ந்து தற்போது இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் மறறும் காணாமல் ஆக்கப்படுதல் உட்பட்ட மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்பான, முக்கிய குற்றவாளியான இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவினை பிரித்தானியா தடை செய்ய வேண்டுமென, இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் இந்த கோரிக்கை விடுப்பதாக மேலும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்ற ஆதாரங்களின் அடிப்படையில் அமெரிக்கா சவேந்திர சில்வாவினையும் அவரது குடும்ப அங்கத்தவர்களையும் தடை செய்தமையையும் சுட்டிக்காட்டியுள்ளதோடு, கடந்த ஏப்ரல் 2021 இல் சர்வதேச மனித உரிமை அமைப்பான ITJP சவேந்திர சில்வாவின் யுத்தக்குற்றங்களிற்கான ஆதாரங்களை உள்ளடக்கிய 50 பக்க அறிக்கை ஒன்றினை பிரித்தானிய அரசிடம் சமர்ப்பித்து அவரை தடை செய்யும்படி கோரியிருந்தமையையும் இது போல மே 2021 இல் ICPPG இலங்கையில் மிக அண்மையில் சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்ட 100 இற்கு மேற்பட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து தொடரும் சித்திரவதைகளிற்கு காரணமான சவேந்திர சில்வா பிரித்தானிய அரசினால் தடை செய்யப்பட வேண்டுமென கோரியிருந்தமையையும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 18 மே 2021 அன்று பிரித்தானிய பாராளுமன்றில் ஸ்கொட்லாந்து தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆன் (Hon. McLaughlin Anne) அவர்களால் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திரசில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் சர்வதேச மனித உரிமைகள் விடயத்தில் பிரித்தானியா தனது உறுதியான நிலைப்பாட்டை முன்னிறுத்த வேண்டுமென்பதை உள்ளடக்கிய முன்பிரேரணை (EDM 64) ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இதுவரை 33 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களில் சித்திரவதைக்குள்ளான 200 பேரின் வாக்குமூலங்கள் அடிப்படையில், கடந்த

23 யூலை 2021 அன்று ICPPG இன் இளையோரால் அணியால் பிரித்தானிய பிரதமரிற்கு மனுவொன்று சமர்ப்பிக்கப்படடிருந்ததுடன் ICPPG இனால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நவம்பர் 2019 முதல் மார்ச் 2022 வரையான காலப்பகுதியில் 848 மனித உரிமைமீறல் சம்பவங்கள் ஊடகங்களில் பதிவானமை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் 2022 இல் 13 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து இலங்கையில் தொடரும் கடத்தல், சித்திரவதை மற்றும் மனித உரிமை மீறல்களை நிறுத்துமாறும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை அதிகாரிகள் மீது பிரித்தானியா தடை விதிப்பதுடன் அதனது உலகளாவிய நீதிஅதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரி, பொதுநலவாய நாடுகள் விவகார அமைச்சரும் பிரித்தானியப் பிரதமரின் சிறப்புப் பிரதிநிதியுமான அதி மதிப்பிற்குரிய ரரீக் அஹமட் பிரபு அவர்களுக்கு (The Rt. Hon. Lord (Tariq) Ahmad of Wimbledon) கடிதங்களை சமர்ப்பித்திருந்தனர் என்பதும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தனை அழுத்தங்களுக்கு மத்தியிலும்

சவேந்திர சில்வாவின் தடை தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருக்கும் நிலையில், பிரித்தானியாவிலுள்ள இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடு கடந்த உறவுகளின் சங்கத்தினர் இம்மனுவை சமர்பித்து, பிரித்தானிய அரசு தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும் நிலைப்பாட்டில் நேர்மையாகவும் உறுதியாகவும் இருப்பது உண்மையானால், சவேந்திர சில்வாவை தடைசெய்யும் இந்த சிறிய நடவடிக்கையாவது முதல்படியாக எடுப்பதன் மூலம் தனது நிலைப்பாட்டை நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் புலம்பெயர் நாடுகளில் சிதறி வாழும் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின், காணாமல் போன தங்கள் உறவுகளின் விபரங்களை பதிவு செய்யவும், இந்த அமைப்புடன் இணைந்து நீதிதேடல் பணிகளில் செயற்படவும் விரும்பினால் தங்கள் விபரங்களை கீழுள்ள படிவத்தில் பூர்த்தி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடுகடந்த உறவுகளின் சங்கத்தினால் பிரித்தானிய பிரதமரிற்கு மகஜர்.